‘அக்சாய் சின்’ மீட்கப்பட வேண்டிய நேரமிது: லடாக் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்

புதுடெல்லி: இந்தியாவுக்கு உரிய, அதேசமயம் சீனாவின் ஆக்ரமிப்பில் உள்ள அக்சாய் சின் பகுதியை மீட்கும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் லடாக் பகுதி பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினராக ஜம்யாங் செரிங் நம்க்யால்.

அவர் கூறியுள்ளதாவது, “சீனாவினுடையக் கட்டுப்பாட்டில் உள்ள அக்சய் சின் மட்டுமல்லாது, கில்ஜித் மற்றும் பலுசிஸ்தான் போன்ற பகுதிகளும் லடாக்கின் ஒரு அங்கமாகும். 2020ம் ஆண்டில் உள்ள இந்தியா ஒன்றும், 1962ம் ஆண்டு இருந்த இந்தியா அல்ல.

நம் நாட்டைச் சேர்ந்த மேய்ப்பர்கள் தங்கள் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல வேண்டும். சீனா அவர்களுக்கு அனுமதியை மறுத்தால், இந்திய நிலப்பரப்பை மீட்டெடுக்க வேண்டும். எல்லையைப் பாதுகாப்பதில் உள்ளூர் மக்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது” என்றார் அவர்.

பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை மீறி, இந்தியாவிற்கு சொந்தமான கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், கூடாரங்களை அமைத்து கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயன்றுள்ளது சீனா. அத்துமீறி அமைக்கப்பட்ட சீன படைகளின் கூடாரங்களை இந்திய வீரர்கள் அகற்ற முயன்றபோது, மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.