ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியுடன் விராத் கோலி நாடு திரும்பப் போகிறார் என்றவுடனேயே, ‘ஐயோ, இந்திய அணியின் நிலைமை அவ்வளவுதானா?’ என்பதாக அதிர்ச்சியடைந்தவர்கள் அனேகம் பேர். ஆனால், அந்த விராத் கோலியின் தலைமையில்தான், அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், 36 ரன்களுக்கெல்லாம் ஆட்டமிழந்து, மிக மிக கேவலமான ஒரு தோல்வியை இந்திய அணி பதிவு செய்தது என்பதைப் பற்றி, ஏனோ அவர்கள் பேச மறந்துவிடுகிறார்கள்.

அதே விராத் கோலியின் தலைமையில்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. மேலும், கடைசி டி-20 போட்டியையும் கோட்டைவிட்டது. ஆனால், இதுவெல்லாம் பெரிதாக பேசப்படுவதில்லை.

ஆனால், பஞ்சரான அல்லது நைந்துபோன ஒரு அணியை வைத்து, மிக வலுவான ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, மற்றொரு டெஸ்ட் போட்டியில் பிரமாதமான டிரா என்று விஷயத்தை தன் தலைமையில் சிறப்பாக முடித்தார் அஜின்கியா ரஹானே.

ஒருவேளை, விராத் கோலி நாடு திரும்பாமல் தொடர்ந்து அணிக்கு தலைமையேற்றிருந்தால், இந்திய அணிக்கு இந்த வெற்றி சாத்தியப்பட்டிருக்குமா? என்பது பெரிய கேள்விக்குறிதான்! ஒருவேளை 4-0 என்று கேவலமாக ஒயிட்வாஷ் கூட ஆகியிருக்கலாம்.

ஆனால், ரஹானே துள்ளிக் குதிக்கவும் இல்லை, எந்த வீரரையும் தேவையில்லாமல் ஒதுக்கவும் இல்லை, யாரையும் முறைத்துக் கொள்ளவும் இல்லை, யாரிடமும் சண்டை செய்யவும் இல்லை, இப்படியான ஒரு மோசமான அணியை என்னிடம் தருகிறீர்களே என்று யாரையும் நொந்து கொள்ளவும் இல்லை. மாறாக, இயல்பாக மற்றும் கூலாக நடந்துகொண்டார். முக்கியமான கட்டத்தில் தன்னை ரன்அவுட் ஆக்கிய ஜடேஜாவிடம்கூட முகத்தைக் காட்டாமல், அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிவிட்டே சென்றார்.

இந்த இடத்தில், விராத் கோலி குறித்து கெளதம் கம்பீர் கூறியுள்ள கருத்தையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. “விராத் கோலியிடம் ஆட்டத்திறன் சிறப்பாக இருக்கலாம். ஆனால், பெரிய போட்டிகளை கேப்டனாக வெல்லும் திறன் அவரிடம் இல்லை. இந்த இடத்தில், மகேந்திர சிங் தோனியையும், ரோகித் ஷர்மாவையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

களத்தில் எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தாலும் சரி, எப்படி சிறப்பாக ஆடினாலும் சரி, இறுதியில் கோப்பையை வெல்வதென்பது மிக முக்கியம்” என்பதாக பேசினார் கெளதம் கம்பீர்.

உண்மைதான், மினி உலகக்கோப்பை ஆகட்டும், 2019 உலகக்கோப்பை போட்டியாகட்டும், ஐபிஎல் கோப்பை ஆகட்டும், இவை எதிலுமே ஒரு கேப்டனாக விராத் கோலி சோபிக்கவேயில்லை. இதுபோன்ற தொடர்களில், அணியை புத்திசாலித்தனமாக வழிநடத்துவது மிகவும் முக்கியம்.

ஆனாலும், தனக்குப் போட்டியாக யார் தலையெடுத்தாலும், அவர்களை தனது அரசியலின் மூலம் தொடர்ந்து ஓரங்கட்டி வருகிறார் விராத் கோலி. இப்போது, டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, விராத் கோலி பெரிய ஆளே இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் ரஹானே!

எனவே, இனிமேலாவது, அனைத்துவகை போட்டிகளுக்கும் ஒரே கேப்டன்தான் என்ற வறட்டுக் கொள்கையில் பிடிவாதமாக இல்லாமல், டெஸ்ட் போட்டிகளுக்கு அஜின்கியா ரஹானேவையும், டி-20 போட்டிகளுக்கு ரோகித் ஷர்மாவையும் கேப்டனாக நியமிக்கும் முடிவை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். செய்யுமா?