வாடிக்கை….இது ஒரு வேடிக்கை..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளையடுத்து, வாடிக்கையான ஒரு பல்லவியை சிலர் மீண்டும் எடுத்துப்பாடத் தொடங்கிவிட்டனர். அது ஒரு வேடிக்கையான பல்லவிதான்!

குட்டி மாநிலமும் யூனியன் பிரதேசமுமான டெல்லியின் சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்ற கெஜ்ரிவால், மிகப்பெரிய நாடான இந்தியாவின் பிரதமர் பதவிக்கு, அடுத்த தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடுவாரா? என்பதுதான் அந்தப் பல்லவி!

பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் வென்றபோதும், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி வென்றபோதும், ஒடிசாவில் நவீன் பட்நாயக் வென்றபோதும் இதே பல்லவி, ஒரே ராகத்தில் இசைக்கப்பட்டது!

அடிப்படையற்ற, சிந்தனையற்ற, தெளிவற்ற மற்றும் புரிதலற்ற இதுபோன்ற கருத்துகள், இந்திய சமூக அமைப்பில் அவ்வப்போது கிளம்புவதும் ஒரு வாடிக்கைதான்!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வென்றபோது, அவர் இந்தியப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற கருத்து ஒலித்தபோது அதில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் இருக்கவில்லை. ஏனெனில், நாட்டின் பல மாநிலங்களில் அமைப்பு பலத்தையும் வாக்கு வங்கியையும் கொண்டிருக்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவராக இருந்தார் மோடி!

காங்கிரஸின் ராகுல் காந்தி பிரதமராக முன்மொழியப்பட்டதும், நாடெங்கிலும் சிறகு விரித்திருக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில்தான்!

பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் மாநிலத் தேர்தல்களில் வென்றால், அவர்களை தேசிய முகமாக முன்னிறுத்தும் சிந்தனையே சிறுபிள்ளைத்தனமானது. தேசியளவில் தெரிந்த முகமாக இருப்பது மட்டுமே தகுதியா..?

யார் பெரியவர் என்ற ஈகோ, சுயநலம், ஆசை, ஒற்றுமையின்மை உள்ளிட்ட பலவித காரணிகள், பிராந்தியத் தலைவர்களை எப்போதும் ஒருங்கிணைய விட்டதில்லை. இதற்கு கடந்தகால அனுபவங்கள் எத்தனையோ உள்ளன.

தேசிய கட்சியின் ஆதரவில்லாமல் 1977ம் ஆண்டில் ஆட்சியமைத்த ஜனதா அரசு என்னவானது? பா.ஜ. ஆதரவுடன் 1989ம் ஆண்டு ஆட்சியமைத்த தேசிய முன்னணி அரசு என்னவானது? 1996ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்த ஐக்கிய முன்னணி அரசின் ஆயுள்..?

பாரதீய ஜனதாவாகவோ அல்லது காங்கிரஸாகவோ மட்டும்தான் இருக்க வேண்டுமென்பதல்ல. குறைந்தபட்சம் 200 தொகுதிகளையாவது உள்ளடக்கிய மாநிலங்களில் அமைப்பு பலத்தையும் வாக்கு வங்கியையும் ஏதேனும் ஒரு கட்சி கொண்டிருந்தால், அந்தக் கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமராக முன்னிறுத்தப்படுவதில் எந்தப் பெரிய நடைமுறை முரண்பாடும் இருக்கப்போவதில்லை!

மற்றபடி, பிராந்தியக் கட்சிகளின்(அது சிறியதோ அல்லது பெரியதோ) தலைவர்களை, பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் கணக்கானது, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் சரியாக வராது.

ஆனாலும், வெட்டி பரபரப்பு என்ற வகைப்பாட்டில், வாடிக்கையாக எழுந்துவரும் அந்தப் பல்லவி, எப்போதும் வேடிக்கையாகவே இருந்துவிட்டுப் போகும்..!

 

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-