குளியலை ஆளுநர் பார்த்தாக சொல்வது தவறான செய்தி: சம்பந்தப்பட்ட பெண் தகவல்

கடலூர் :

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தங்கள் வீட்டில் வந்து கழிவறையை பார்வையிட்டு சென்ற போது யாரும் குளிக்கவில்லை. ஊடகங்களில் தவறான தகவல் பரவுகிறது என்று சம்பந்தப்பட்ட பெண் கவுரி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வுக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை ஒன்றை ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது அவர் திடீரென ஒரு வீட்டில் நுழைந்ததாகவும், அங்கு ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததாகவும், அதிகாரிகளை பார்த்து அந்தப் பெண் அலறியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் குறிப்பிட்ட வீட்டின் இல்லத்தரசி கவுரி என்பவர் விளக்கம் அளிக்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. அதில் பேசும் பெண், “ஆளுநர் எங்கள் வீட்டிற்குத் தான் வந்து ஆய்வு செய்தார். வீட்டில் நானும் என்னுடைய சகோதரியும் இருந்தோம்.

அவர் பத்து நிமிடங்கள் கழிவறையை பார்வையிட்டுவிட்டு சென்றுவிட்டார். ஆளுநரிடம் நான் மனு கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த நேரத்தில் நான் குளித்துக் கொண்டிருந்தால் நான் குளித்துவிட்டு வரும் வரை ஆளுநர் காத்திருந்து மனு வாங்கி சென்றாரா..?

அந்த சமயத்தில் யாரும் அங்கு குளிக்கவில்லை, நான் குளித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது தவறு. இப்படியான செய்தியால் வெளியில் தலைகாட்ட முடியாமல் நான் வீட்டிலேயே அடைந்துகிடக்கிறேன். பொய்ச் செய்தி பரவுவது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க இருக்கிறேன்” என்று அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.