“அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்து, நான் தெய்வமாக வணங்கும் அக்காவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பேன்” என்று சசிகலாவிடமிருந்து திடீர் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அதை வைத்து பல்வேறான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சசிகலாவின் அரசியல் முடிந்துவிட்டதாகவே, சிலர் எழுதிவருகின்றனர். ஆனால், இதில் வெறொரு சூட்சுமம் ஒளிந்திருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

இன்றைய நெருக்கடியான சூழலில், அதிமுகவை பாஜக முழுமையாக ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், சசிகலாவால் நினைத்தபடி உடனடியாக எதையும் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இத்தகைய சூழலில் எதிலும் தடாலடியாக குதித்து, அதில் சறுக்கலை சந்தித்து, தனது இமேஜை டேமேஜ் செய்துகொள்ள சசிகலா விரும்பவில்லை.

இந்த தேர்தலில், மகா மோசமான ஆட்சியை வழங்கியுள்ள, அடிமைகளின் கூடாரம் என்று பெயர் பெற்றுள்ள, தமிழ்நாட்டை அடமானம் வைத்துவிட்ட, பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் அதிமுக பெரியளவில் தோல்வியை சந்திக்கும் என்று சசிகலா கணிக்கலாம்!

அப்படி, தோல்வி ஏற்படும் பட்சத்தில், இபிஎஸ் – ஓபிஎஸ் பிணக்கு இன்னும் பெரியளவில் அதிகரித்து, கட்சி கலகலக்கத் தொடங்கலாம். அப்போது, சசிகலாவை நோக்கி பலரின் பார்வை திரும்பலாம். அப்போது, பாஜகவாலும் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போகலாம்.

எனவே, அந்த சமயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இபிஎஸ் & ஒபிஎஸ் அணிகளை ஒரு கை பார்க்கலாம் என்று சசிகலா திட்டமிட்டிருக்கலாம்!

இப்போது, அதிமுகவை சசிகலா அசைக்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே, பாஜகதான் என்று கூறப்படுகிறது. எனவே, சற்று காத்திருப்பதே நன்மையைப் பயக்கும் என்று அவர் யோசித்திருக்கலாம்!

எடப்பாடியின் அதிமுகவை பெரியளவில் தேர்தலில் வீழ்த்த, சசிகலா தரப்பினர் மறைமுகமாக உள்ளடி வேலைகளை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில், தினகரனின் அமமுக, ஆளுங்கட்சிக்கு ஏற்படுத்தும் சேதமும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.