இந்த சட்டமன்ற தேர்தலுக்காக, அதிமுக கூட்டணியில் பாஜக எப்படியும் 35 முதல் 40 தொகுதிகள் வரை பெற்றுவிடும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில், அக்கட்சியினர் அப்படித்தான் பேசிவந்தனர்.

பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும் நிலையில், இது சாத்தியமே! என்றும் கருதப்பட்டது. ஆனால், ஜஸ்ட் 20 தொகுதிகள் மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வாக்கு வங்கிக்கு இது அதிகமான தொகுதிகள்தான் என்றபோதும், வேறுவகையில் பார்க்கையில், இது குறைந்த தொகுதிகள்தான்!

இப்படித்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், பாஜகவுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. வாக்குவங்கி வகையில் அதுவும் அதிகம்தான் என்றாலும், அதிமுகவை ஆதிக்கம் செய்யும் கட்சி என்ற வகையில், பாஜகவுக்கான தொகுதிகள் குறைவாகவே பார்க்கப்பட்டது.

பாஜகவை குறைந்த தொகுதிகளுக்கு அதிமுக எப்படி சம்மதிக்க வைக்கிறது என்பதற்கு அதிகமெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை.

“நீங்கள் அதிக தொகுதிகளில் போட்டியிட்டால், அந்த தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெல்வது எளிதாகிவிடும். எனவே, வீணாக எதிர்க்கட்சிகளுக்கு தொகுதிகளை விட்டுத்தர வேண்டாம். நீங்கள் குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிடுங்கள். நாங்கள் அதிகம் வென்றாலும், அது உங்களுக்குத்தானே நன்மை” என்று அதிமுக தரப்பு சமரசம் செய்திருக்கும்.

இதை, பாஜகவும் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கும்.