இஸ்லாமாபாத்: இந்தியாவில் தற்போது நடைபெறும் ஆட்சி மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் பார்க்கையில், பாகிஸ்தான் – இந்தியா இருதரப்பு தொடர்களை நடத்துவது சாத்தியமில்லாத விஷயம் என்றுள்ளார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான்.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 1979ம் ஆண்டு , ஒரு நாட்டு ரசிகர்களின் மனநிலை நன்றாக இருந்தது. திறமையை பாரபட்சமின்றி பாராட்டும் நிலை இருந்தது.

ஆனால், 1987ம் ஆண்டில் நான் பாகிஸ்தான் கேப்டனாக இந்திய சுற்றுப்பயணம் செய்தபோது, ரசிகர்களிடம் எங்கள் மீது பெரிய அளவில் பகைமை இருந்தது. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பதற்றமும் இருந்தது.

இந்நிலையில், இன்று இந்தியாவில் நடக்கும் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் அரசை வைத்துப் பார்க்கையில், இருதரப்பு தொடர்களுக்கு உகந்ததான சூழ்நிலை இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து தொடரை வென்றது. இந்திய அணியை எங்கள் ரசிகர்கள் கொண்டாடினர். ஆஷஸ் தொடர் முக்கியமானதாக இருக்கலாம்; ஆனால் இந்தியா-பாகிஸ்தான் தொடருக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஏனெனில், இதன் சூழ்நிலையே வேறு.

இன்றைய டி-20 கிரிகெட்டின் தன்மை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஆனாலும், நான் பழைய பள்ளியைச் சேர்ந்தவன். எனவே, என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் ஒன்றுதான் ஒரு சவால் தரும் விஷயம்” என்றார்.