அரசுக்கு களங்கம் விளைவிக்கவே ரெய்டு: முதல்வர் சித்தராமைய்யா

--

பெங்களூரு:

ர்நாடக காங்கிரஸ் அரசு மீது களங்கம் விளைவிக்கவே வருமான வரித்துறையினர் ரெய்டு நடைபெற்றது என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா மத்தியஅரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று நடைபெற்று வரும் ரெய்டானது, எனது அரசு மீது பழிவாங்கும் நடவடிக்கையாகவே மத்திய அரசால் இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும்  அவர் கூறி உள்ளார்.

இன்று காலை முதல் பெங்களூருவில் குஜராத் எம்.எல்.ஏ.,க்கள் தங்கி  ஈகிள் ரிசார்ட், மின்துறை அமைச்சர் சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட  39 இடங்களில்   வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மைசூருவில் உள்ள அமைச்சரின் உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனை தொடர்பாக விளக்கம் அளிக்க போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ள சித்தராமைய்யா, மத்திய அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

ரெய்டு குறித்து சித்தராமைய்யா கூறுகையில், எனது அரசு மீது களங்கம் விளைவிக்கவும், நெருக்கடி கொடுக்கவுமே மத்திய அரசு இந்த வருமான வரித்துறை சோதனையை நடத்தி உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் செயல். அரசியல் உள்நோக்கத்திற்காக நடத்தப்பட்ட ரெய்டு.

இந்த சோதனையில் உள்ளூர் போலீசார் பயன்படுத்தப்படவில்லை. விதிகளை மீறி மத்திய ரிசர்வ் படை போலீசை மத்திய அரசு சோதனைக்கு பயன்படுத்தி உள்ளது.

வருமான வரித்துறையை ஏவல் துறையாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை வாய்மூட செய்யவே  இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவர்.

இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.