சென்னை,

மிழக அரசு ஒப்பந்ததாரருக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை யினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் காரணமாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தமிழக அரசின் நெடுஞ்சாலை பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனுக்கு சொந்தமான நிறுவனங்களில் நேற்று இரவு முதல்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் பழைய ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்ட பிறகு, வருமான வரித்துறையினரும், அமலாக்கத் துறையினரும் நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், தொழிலதிபரும், பிரபல மணல் ஏஜெண்டான சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார்உள்பட பலரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழக அரசின் சாலைப் பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனுக்குச் சொந்தமான 3 நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகம் முழுவதும் போட்டப்பட்டுள்ள பெரும்பாலான சாலைகள் இவரது நிறுவனம் மூலமே ஒப்பந்தம் எடுக்கப்பட்டதாகவும், இதில் பல ஊழல்கள் நடைபெற்றதாகவும், தரமற்ற சாலைகளை அமைத்ததாகவும்  கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு முதல் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது. வருமானத்தைக் குறைத்துக் காட்டியது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அவரது அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த  சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த ஆவனங்களில் சாலைகள் போடப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஆவனங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்காரணமாக நெடுஞ்சாலைத் துறையை கவனித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கட்சியினரிடையே ஒற்றுமையில்லாமல் ஆட்சி எப்போது கவிழுமோ என்ற சிந்தனை யில் சுழன்று கொண்டிருக்கும் எடப்பாடிக்கு,

இன்று தினகரன் அணியை சேர்ந்த தோப்பு, தனது சட்டமன்ற குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, எந்த நேரத்திலும்  ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று பயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,

தற்போது நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டிருப்பது மேலும் கிலியை ஏற்படுத்தி உள்ளதாக கோட்டை வட்டார தகவலகள் கூறுகின்றன.