சென்னை:

ர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக  எழுந்த புகாரின் பேரில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் நேற்று வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

வரும் 12ம்  தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் இடை்தேர்தள் நடக்க இருக்கிறது. இத் தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாகவும், குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் அளிக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் புகார் செய்யப்பட்டது.

தினகரன்

டி.டி.வி. தினகரன் ஆட்கள், அவரது சின்னமான தொப்பி அணிந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் எழுந்தது. நேற்று முன்தினம் தொப்பி அணிந்து வாக்காளர்களுக்கு பணம் அளித்துக்கொண்டிருந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆர்.கே. நகரில் உள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில், வாக்காளர்களுக்கு வழங்க  பெரும் தொகை பதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று இரவு ராமச்சந்திரன் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து மூன்று மணி நேரம் இந்த சோதனை நடந்தது. ஆனால் சோதனை முடிவில் பணமோ பொருட்களோ கைப்பற்றப்படவில்லை.

இந்த அதிரடி ரெய்டு ஆர்.கே. நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.