சென்னை:

சிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் நடந்துவரும் வருமானவரி சோதனை, டி.டி.வி. தினகரனை பணிய வைக்கும் முயற்சியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி என்று அறியப்படுவது ஜெயா டி.வி. இது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே போல வி.கே. சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான, நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்,  டி.வி.வி. தினகரன் இல்லம்,  சசிகலா – தினகரன் உறவினர்களான  மன்னார்குடி  திவாகரன்,  சென்னை கிருஷ்ணப்பிரியா ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட  பல இடங்களில் இன்று காலை முதல் வருமானவரி சோதனை நடந்துவருகிறது. ஜெயலலிதா ஓய்வெடுக்கும் இல்லமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களாவிலும் சோதனை நடக்கிறது. ஜெயா டிவி சி.இ.ஓ.வான விவேக் இல்லத்திலும் சோதனை நடக்கிறது.

தினகரன் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி இல்லத்திலும் சோதனை நடக்கிறது.

இந்த வருமானவரி சோதனைகள் என்பது டிடிவி தினகரனை பணியவைக்கும் முயற்சி என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்தை அடுத்து அவரது தோழி சசிகலா அதிகாரத்தை கையில் எடுக்க முயன்றார்.  ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆகிகய சசிகலா, பிறகு தானே முதல்வர் ஆக திட்டமிட்டார். இதன் ஒரு பகுதியாக கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டார். பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து வெளியேறச் சொன்னார்.

அப்போதைக்கு ஒப்புக்கொண்டு விலகினாலும், தன்னை நிர்ப்பந்தப்படுத்தி வெளியேற்றியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார்.

இதற்கிடையே சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க விரும்புவதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்தும் அப்போதைய (தற்காலிக) கவர்னர் ராம்மோகனராவ் கண்டுகொள்ளவில்லை.

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்ப வரக்கூடும் என்கிற நிலையில் வேண்டுமென்றே அவர் மவுனமாக இருந்ததாக  அப்போது குற்றச்சாட்டு எழுந்த்து.

மத்திய பாஜக அரசு, “அ.தி.மு.க. மற்றும் ஆட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை விலக்கி வைக்க விரும்புவதன் வெளிப்பாடே கவர்னரின் மவுனம்” என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வந்து சசிகலாமீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைக்குச் செல்லும் முன், அவர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்தினார். அவரும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிதத்தாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் எடப்பாடியும் சசிகாலா – தினகரன் ஆகியோரை ஒதுக்க ஆரம்பித்தனர். தனி அணியாக செயல்பட்ட ஓ.பி.எஸ்., ஆட்சயில் இணைந்து துணை முதலவரானார்.

இதற்குக்  காரணம் மத்திய  பாஜக அரசுதான் என்றும் தமிழக ஆட்சி மத்திய பாஜக அரசின் மறைமுக உத்தரவுகளின் பெயரிலேயே நடக்கிறது என்றும் புகார் எழுந்தது.

இதற்கிடையே ஜெயலலிதா மறைந்ததால் காலியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தள் நடந்தபோது, டிடிவி தினகரன் தரப்பு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக   புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம், அத்தேர்தலை ஒத்திவைத்தது.

பணப்பட்டவாடாவை தடுக்காமல், தேர்தலை ஒத்திவைத்ததன் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருக்கிறது என்றும் பரவலாக பேசப்பட்டது.

தவிர, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் இருக்கும் நிலையில், அச் சின்னத்தைப் பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசாரால் கைது  செய்யப்பட்டார்.

“லஞ்சம் கொடுக்க முயன்றவர் கைது என்றால், அதைப் பெற முயன்றவர் யார்.. அவர் மீது என்ன நடவடிக்கை.. இதுவும் பாஜக அரசின் மிரட்டல் அரசியலே” என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடைய சசிகலா குடும்பத்தினரும் அவர்களத ஆதரவாளர்கள் “நடப்பது ஆரிய- திராவிடப் போர்” என  முழங்கினர்.  ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மத்திய அரசுடன் சமாதானமாக செல்ல முயன்றனர்.

தான் கைது செய்யப்பட்டபோது கூட மத்திய அரசை விமர்சித்து டிடிவி தினகரன் எதுவும் பேசவில்லை. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். இதழில் மத்திய அரசை விமர்சித்து கவிதை எழுதிய அதன் ஆசிரியர் மருது. அழகுராஜ் பணியைவிட்டு நீக்கப்பட்டார்.

ஆனாலும் சசிகலா – தினகரன் குடும்பத்தினரை அரசியலைவிட்டு ஒதுக்கும் அதே பாணியை மத்திய பாஜக அரசு.. அதிமுக மற்றும் தமிழக அரசு மூலம் செய்துவந்த்து. சசிகலா மற்றும் தினகரனை ஆளும் அதிமுகவினர் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு, விசாரணை தேர்தல் ஆணையத்தில் நேற்றுதான் நிறைவடைந்தது.

தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

அதே போல நேற்று பெங்களூரு மத்திய சிறைக்குச் சென்ற டிடிவி தினகரன், அங்கு சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில்தான் இன்று காலை முதல் சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.

இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயர் ஆகியவை ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்குதான் கிடைக்கும் என்றும்  கூறப்படுகிறது. ஆகையால் தினகரன் தரப்பு மீண்டும் குறுக்கீடு செய்து தடை பெற்றுவிடக் கூடாது என்று மிரட்டுவதற்காக இந்த வருமான வரி சோதனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒருவருடமாக வருமான நடைபெற்ற வருமான வரி சோதனைகள் மர்மமாகவே இருந்து வருகின்றன. அதிரடியாக சோதனை நடப்பதும், அதன் பிறகு தொடர் நடவடிக்கை ஏதும் இல்லமலிருப்பதும், சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.