சென்னை: ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டு உள்பட அவர்களுக்கு  சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும், திமுக   தொண்டர்கள் அண்ணாநகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் ஐ.டி.ரெய்டு நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறையினரின் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

நெருக்கடி நிலையையே சந்தித்த இயக்கம் திமுக. இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் நேரில் ஊழல் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், கடந்த தேர்தலில் கண்டெய்னர் லாரியில் ரூபாய் 570 கோடி பிடிபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

“அதிமுகவின் பணப்பட்டுவாடாவை மறைக்கவே ஐடி ரெயிடு நடத்தியுள்ளது பாஜக”  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கம்யூ தலைவர் முத்தரசன்

திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கவே ஐ.டி. சோதனை நடப்பதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். வருமான வரித்துறை அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். ஐ.டி. சோதனை நடத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என்ற குறுகிய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்றும் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை. இது பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு. திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு. இத்தகைய அரசியல்ரீதியான அச்சுறுத்தல்களை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “மு க ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

 புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்  நாராயணசாமி
தோல்வி பயத்தின் காரணமாக பாஜகவும் அதிமுகவும் வருமான வரித்துறையை ஏவிவிட்டுள்ளன என ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துவதற்கு நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் திமுக பற்றி தவறான கருத்தை பரப்பிவிட்டு முயற்சி செய்கின்றனர். எதிர்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தி.க. தலைவர் கி.வீரமணி

மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை ஏவப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களால் அதிமுக, பாஜகவுக்கு எதிரான ஆழிப்பேரலையை தடுத்துவிட முடியாது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போது கைப்பற்றப்பட்ட அமைச்சர் டைரியின் மீது இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்று கி.வீரமணி கேள்வி எழுப்பினார். அதிமுகவினர் ஆங்காங்கே பணப்பட்டுவாடா ஈடுபட்டு வரும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவரின் மகள்  வீடு மற்றும் பல திமுகவினர் வீடுகளில் ரெய்டு நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை அண்ணாநகரில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டில் சோதனை நடத்துவதற்கு தொண்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.