மாயாவதியின் சகோதரரின் ரூ 400 கோடி மனை : வருமான வரித்துறை பறிமுதல்

நொய்டா

மாயாவதியின் சகோதரர் மற்றும் அவர் மனைவிக்கு சொந்தமான நொய்டாவில் உள்ள ரூ.400 கோடி மதிப்புள்ள மனையை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பினாமி சொத்து பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மோடி அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இந்த சட்டம் குறித்த நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு வருமான வரித்துறையை நியமித்தது. இந்த சட்டப்படி பினாமி சொத்துக்களாக கண்டறியப்படும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் இந்த சொத்துக்களின் உண்மை உரிமையாளருக்கு 7 வருட சிறைத் தண்டனையும் சொத்தின் மதிப்பில் 25% அபராதமும் விதிக்கப்படும்.

இந்நிலையில் நொய்டாவில் உள்ள ஒரு 28,328 சதுர மீட்டர் பரப்பளவு அதாவது சுமார் 7 ஏக்கர் மனை ஒன்று வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவர் மனைவி விசிதர் லதா ஆகியோருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மனையின் தற்போதைய மதிப்பு ரூ. 400 கோடி ஆகும் .

இந்த மனை பினாமி பெயரில் வாங்கப்பட்டு அதை ஆனந்த் குமார் மற்றும் அவர் மனைவி அனுபவித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையொட்டி இந்த மனை வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு சொத்து வாங்கிய விவரங்களைக் கேட்டு ஆனந்த் குமார் மற்றும் அவர் மனைவிக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாயாவதி சமீபத்தில் ஆனந்த் குமாரை தனது கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.