கொல்கத்தா: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர் நடப்பது பிசிசிஐ கையில் இல்லை எனவும், அதை முடிவுசெய்ய வேண்டியது இருநாட்டுப் பிரதமர்கள்தான் என்றும் கூறியுள்ளார் பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி.

பிசிசிஐ அமைப்பின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற கங்குலியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் எதிர்கால செயல்பாடுகள் எப்படி அமையும் என்பது குறித்தும் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது முதல், இருநாட்டு அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர்கள் நடப்பதில்லை. ஆனால், 2012ம் ஆண்டு மட்டும் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடியது. அதேசமயம், இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் மோதிக் கொள்கின்றன.

தற்போது புலவாமா தாக்குதலுக்குப் பின்னர் நிலைமை இன்னும் மோசம். இந்நிலையில் கங்குலி கூறியுள்ளதாவது, “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டித் தொடர் எப்போது துவங்கும் என்பது எனக்குத் தெரியாது. இந்தக் கேள்வியை நமது பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோரிடம்தான் கேட்க வேண்டும்.

சர்வதேச தொடர்கள் அனைத்தும் மத்திய அரசின் வழியாகத்தான் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதனால் இது குறித்து நாங்கள் எதையும் முடிவுசெய்ய முடியாது” என்றுள்ளாள் சவுரவ் கங்குலி.