ஜிஎஸ்டி மூலம் விலைவாசி குறையாதது மிகப் பெரிய ஏமாற்றம்….கேரளா நிதியமைச்சர்

திருவனந்தபுரம்:

ஜிஎஸ்டி அமல்படுத்தினால் பொருட்களின் விலை குறையும் என்று நம்பியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி திட்டம் என்று மத்திய அரசு மார்தட்டிக் கொள்கிறது. இந்நிலையில் கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மின்ட் இதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதன் விபரம்…

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் சாதாரண மக்கள் வாங்கும் பொருட்களின் விலை குறையவில்லை. வரி விதிப்பும் குறையவில்லை. ஜிஎஸ்டி மூலம் மிகப் பெரிய அளவில் பயன் கிடை க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வரி விதிப்பு 40 சதவீதம் என்ற நிலையில் குறைந்துள்ளது. ஆனால் பொருட்களின் விலை குறையவில்லை. கார்பரேட் நிறுவங்களுக்கு தான் அதிக லாபம் கிடைக்கிறது. இது தான் பணவீக்கத்தில் எதிரொலித்துள்ளது.

ஏழை மற்றும் சாதாரண மக்கள் இதன் மூலம் பயன்பெறவில்லை. பணமதிப்பிழப்பால் அமைப்ப சாரா தொழில்கள் ஏற்கனவே நசிந்துவிட்டது. தற்போது ஜிஎஸ்டி.யால் மேலும் பெரிய அளவிலான பாதிப்பில் சிக்கி தவிக்கின்றன. மொத்தத்தில் ஜிஎஸ்டி அசுத்தம் நிறைந்ததாக உள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் இ.வே பில் கொண்டு வரப்பட்டது. ஒரு ஆண்டு ஆகியும் கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்கள் முழு அளவில் தயாராக இல்லை. ஆண்டு வர்த்தகம் எவ்வளவு என்பதை கணக்கிட முடியாத நிலை உள்ளது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘மாநிலங்கள் தங்களது உரிமை மற்றும் சுயாட்சியை இழந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. நிதி கூட்டாட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வருடம் ஆகியும் ஒருவரது முழு வருவாயை கணக்கிட முடியவில்லை. எந்த துறையில் இருந்து வருவாய் வருகிறது என்று கணக்கிட முடியாத நிலை உள்ளது. வர்த்தகர்கள் கூறுவதை தான் கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. அரசால் உள்ளே நுழைந்து கணக்கிட முடியவில்லை. இந்திய வரி முறையில் ஜிஎஸ்டி நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்.

வரி குறைப்பை நான் ஏற்கவில்லை. வரி விதிப்பு ஒரு முடிவுக்கு வர அனுமதிக்காத நிலை உள்ளது. ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு தீர்வு இல்லாத நிலை உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு செஸ் மற்றும் ஊக்கத் தொகை வழங்க மாநில அரசுகள் நிர்பந்தம் செய்யப்படுகிறது. ஆனால் வரி நிர்ணயத்தை சுயமாக முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி கேரள அரசின் வருவாயை பாதித்துள்ளது. 20 சதவீத வருவாய் அதிகரிப்பை கேரளா எதிர்பார்த்தது. 90 சதவீத நுகர்வு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் வருவாய் 3 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி.யின் கீழ் கொண்டு வருவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. இதை மத்திய அரசு செய்யாது என்பது எனது கருத்து.

பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றால் கலால் வரியை குறைத்தாலே போதுமானது. கலால் வரியை 200 முதல் 300 சதவீதம் வரை பாஜக அரசு உயர்த்தியதால் தான் விலை உயர்ந்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி.யின் கீழ் கொண்டு வரும் முடிவை தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது’’என்றார்.