இது பந்துவீச்சாளர்களுக்கான மோதல் – எதை சொல்கிறார் ஜோ பர்ன்ஸ்?

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான மோதலாக அமையும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் துவக்க பேட்ஸ்மேன் ஜோ பர்ன்ஸ்.

இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்தாண்டின் ஜனவரி காலக்கட்டங்களில், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ், “இந்த டெஸ்ட் தொடரை நான் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

ஏனெனில், இரண்டு அணிகளிலும் திறமையான பந்துவீச்சாளர்களுக்குப் பஞ்சமில்லை.
பும்ரா, ஷமி, ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றவர்கள் உள்ளனர். எனவே, கோஹ்லி, வார்னர், ஸ்மித் மற்றும் ரோகித் போன்ற ஜாம்பவான்களுக்கு நல்ல சவால் காத்திருக்கிறது.

டெஸ்ட் நம்பர் 1 பட்டம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று, இரு அணிகளுக்குமே நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நெருக்கடி எங்களுக்கு உத்வேகமாகவும் அமையும். இந்தியப் பந்துவீச்சை சந்திக்க, எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்” என்றார் அவர்.