லண்டன்: தனித்தனி வகை கிரிக்கெட்களுக்கு தனித்தனி கேப்டன்கள் என்ற திட்டம் இந்திய கிரிக்கெட்டிற்கு சரிப்பட்டு வராது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன்.
சமீப நாட்களாக, டெஸ்ட் அணிக்கு விராத் கோலியும், ஒருநாள் அணிக்கு ரோகித் ஷர்மாவும், டி-20 அணிக்கு கேஎல் ராகுலும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற கருத்துகள் உலா வருகின்றன. இது சரிவருமா? என்ற விவாதம் ஒருபுறம் எழுந்துவரும் நிலையில், இதுகுறித்து தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளார் நாசர் ஹுசைன்.
அவர் கூறியுள்ளதாவது, “வேறு வேறு கேப்டன்கள் என்பது குணங்கள் தொடர்பானது. கோலி ஒரு கம்பீரமான மற்றும் ஆக்ரோஷமான கேப்டன். இப்படிப்பட்ட விராத் கோலி, எதையும் இன்னொருவரிடம் தருவதற்கு விரும்பாதவர்.
எனவே, கேப்டன் பதவியைப் பிரித்து, தனித்தனி கேப்டன்கள் என்ற முயற்சிகளெல்லாம் இந்திய அணிக்கு சரிப்பட்டு வராது என்பது எனது கருத்து.
அதேநேரத்தில் தனித்தனி வகை கிரிகெட்டிற்கு, வேறு வேறு பயிற்சியாளர்களை நியமிக்கலாம். ஏனெனில், ஆட்டங்களைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கு வியூகங்கள் மாறுபடலாம்” என்றுள்ளார் நாசர் ஹுசைன்.