அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் பாமக வையும் உள்ளே இழுக்க, திமுக தரப்பு தீவிரமான பேச்சு நடத்தி வருவதாயும், அதனை தெளிவாக அறிந்துதான், மனுஸ்ருமிதி பிரச்சினையை தீவிரமாக எழுப்பி, ஸ்டாலினை வைத்தே தனக்கு ஆதரவாக அறிக்கைவிட வைத்தார் திருமாவளவன் என்று கூறப்படுகிறது.
மேலும், அந்தப் பிரச்சினை தீவிரமாகி, திமுக கூட்டணிக்கு சிக்கல் வரும்பட்சத்தில், கூட்டணி கட்சியினரின் விருப்பத்துடன், கூட்டணியிலிருந்தே வெளியேற தயாராக இருப்பதாவும் கூறியுள்ளார் திருமாவளவன். அவரின் இந்த ஸ்டேட்மென்ட், பாமகவை மனதில் வைத்துதான் என்பதே அரசியல் பட்சிகளின் அறிவு உணர்த்தும் செய்தி!
இத்தகைய யூக தகவல்கள் எதிர்காலத்தில் அப்படியே உண்மையாகுமா? என்ற ஆய்வை ஒத்திவைத்துவிட்டு, நாம் வேறொரு விஷயத்திற்கு வருவோம்.
கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தல் முதல், பாமக சேர்ந்த கூட்டணிகள் அனைத்துமே தோல்வியைத்தான் சந்தித்து வருகின்றன. 2016 சட்டமன்ற தேர்தலில் ஒரு என்ஜிஓ நிதியை வைத்து, தகுதிவாய்ந்த அரசியல்வாதி(!) அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, தங்களின் வாக்கு வங்கி தமிழகத்தில் இன்னும் அதேபோன்று இருக்கிறது என்று காட்டினார்கள். அவர்களின் முதல்வர் வேட்பாளர்கூட அந்த தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பது வேறு விஷயம்.
மற்றபடி, 2014 நாடாளுமன்ற தேர்தலில், தருமபுரி தொகுதியில் சாதிப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டு, பசும்பாலில் சத்தியம் வாங்கி, மும்முனை போட்டி நிலவிய அந்தக் களத்தில், கூட்டணியின் துணையுடன் எப்படியோ அன்புமணி வெற்றிபெற்றார்!
ஒரு கட்சியின் தலைவர்(ராமதாஸ்), வேறு தொகுதிகளில் போட்டியிட்ட தன் கட்சியின் பிற வேட்பாளர்களை சுத்தமாக கண்டுகொள்ளாமல், தன் மகன் போட்டியிட்ட தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்த ஒரு அரசியல் விநோதம் அப்போது நடந்தேறியது!
ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதே தருமபுரி தொகுதியில், அதிமுக கூட்டணியில் இருந்தும்கூட, அன்புமணியால் வெல்ல முடியவில்லை.
தொடர்ச்சியாக 5 பொதுத்தேர்தல்களில், அந்தக் கட்சி தோல்வியடைந்து வருவதால், வரும் தேர்தலிலாவது எப்படியேனும் வென்றுவிட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு! அதிமுக கூட்டணியில் போட்டியிட்டால் எதுவும் தேறாது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
எனவே, வெளியுலகிற்கு 60 தொகுதிகள் & அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி என்ற பேரத்தை நடத்துவதாக காட்டிக் கொண்டாலும், கிடைத்ததை வாங்கிக்கொண்டு, எப்படியாவது சட்டமன்ற இடங்களை வெல்ல வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளனர். இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும் என்பது தெரிந்ததே.
இப்போது நாம் திமுகவிற்கு வருவோம். எம்ஜிஆர் உதாசினப்படுத்திவிட்டு சென்ற வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு, கடந்த 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் முக்கியத்துவம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி. ஆனால், அப்போது ஒரு மாபெரும் ராஜதந்திர தவறை செய்தார் அவர். வேறுபல ஜாதிகளையும் சேர்த்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20% உள்ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் ராமதாஸை தேவையில்லாமல் சீனுக்கு கொண்டுவந்து அவரை பெரிய ஆளாக்கினார் கலைஞர். அவரின் அரசியல் சறுக்கல்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
வட மாவட்டங்களில், திமுகவின் வாக்கு வங்கியில் ஓட்டைபோட்டு உருவான கட்சிதான் பாமக. அப்படியான ஒரு கட்சியை வளர்த்துவிட்ட பெரும் தவறை செய்தார் கலைஞர்.
வரலாறு இப்படியிருக்க, தற்போது நிலையில்லாமல் தவித்துவரும் பாமக வை சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் சேர்த்து, அக்கட்சிக்கு ஒரு பெரிய வாழ்வை கொடுக்கும் பெருந்தவறை ஸ்டாலின் செய்யப் போகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
தற்போது திமுகவின் பொதுச்செயலர் பதவி வகிக்கும் துரைமுருகனின் சுயசாதி பாசம், பாமகவை கூட்டணியில் கொண்டுவர துடிக்கிறது என்பது பலரும் அறிந்த செய்தியே! ஆனால், திமுகவின் வாக்கு வங்கிக்கு எப்போதுமே சேதாரத்தை செய்யும் பாமக போன்ற ஒரு கட்சிக்கு, துரைமுருகன் போன்றவர்களின் ஓதுதலுக்கு செவிமடுத்து வாழ்வு கொடுப்பதென்பது ஸ்டாலினுக்கு எதிர்காலத்தில் சிக்கலாகவே அமையும்.
கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவரும் முயற்சியில் திமுக தலைவருடைய கிச்சன் கேபினெட்டில் செல்வாக்குள்ள ஒரு நபரும் மும்முரமாய் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய சூழலில், மத்திய காவி கட்சியின் தில்லாலங்கடி வேலைகள், தமிழகத்தில் எவ்வளவுதான் நிகழ்த்தப்பட்டாலும், ரஜினி போன்ற நடிகர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்ற சூழலும் இருக்கையில், திமுகவின் தற்போதைய கூட்டணியே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெறக்கூடிய நிலை உள்ளது என்பதே கள நிலவரம்.
அப்படியிருக்கையில், பாமக போன்ற ஒரு கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவந்து, கூட்டணி பலம் என்கிற தேவையில்லாத ஒரு கற்பிதத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு வாழ்வளிப்பதென்பது மாபெரும் அரசியல் தவறாக முடியுமே தவிர, அது சமயோசித நடவடிக்கையாகாது. ஏனெனில், இந்தத் தேர்தலில் பாமகவுக்கு கிடைக்கும் வாழ்வானது, அடுத்த தேர்தலில் திமுகவுக்குதான் பிரச்சினையாக முடியும்!