ரோம்: கொரோனா வைரஸ் தொற்றால், உலகளவில் சீனாவுக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது ஐரோப்பாவின் இத்தாலி.

அந்நாட்டில், இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் 366 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றால், இத்தாலியில் கிட்டத்தட்ட 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் வடக்கு இத்தாலிப் பிராந்தியமே மூடப்பட்டு, 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு இத்தாலியில் மக்களின் நகர்வுகளத தடை செய்யப்பட்டுள்ளன. மிகவும் அத்தியாவசிய அம்சங்களுக்கு மட்டுமே நகர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

அப்பிராந்தியத்தில், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. மேலும், திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுப்பாட்டில், இத்தாலியின் புகழ்பெற்ற நகரமான மிலனும் வந்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு அடுத்த மாதம்(ஏப்ரல்) 3ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.