வருமானவரி தாக்கல் செய்ய, ஆதார்-பான் இணைப்புக்கு கால அவகாசம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திக்க போவதாக அறிவத்து இருந்தார். அதன் படி அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வருமானவரி தாக்கல் தொடர்பான அனைத்திற்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

அதன்படி, 2018-19ம் நிதியாண்டுக்கான வருமானவரி தாக்கலுக்கு ஜூன் 30 வரை என அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் தரப்படுகிறது.

தாமதமாக செலுத்தப்படும் வருமானவரி கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் 12% லிருந்து 9% ஆக குறைக்கப்படும். ஆண்டு வருமானம் 5 கோடிக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் தாமத கட்டணம், அபராதம் செலுத்த வேண்டியது இல்லை.

மேலும், ஆதார், பான் எண் இணைப்புக்கான அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூன் 30, 2020 வரையில் இந்த சலுகை. இதில் கால நீட்டிப்பு கிடையாது. பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட மாட்டாது. விவாத் சே விஸ்வாஸ் திட்டமும் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெபிட் அட்டை மூலம் எந்த வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும், 3 மாதங்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது. வங்கி கணக்கில் பொதுவாக கடைபிடிக்கப்படும் குறைந்த அளவு கையிருப்பு எதுவும் தற்போது தேவையில்லை.

வங்கிகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,தொழில்துறையினருக்கான நிவாரண தொகையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.

தொழில் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டத்தைக் கூட்ட 60 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடும் தொழில்துறையினரின் வசதிக்காக சுங்கத் துறை 24 மணி நேரமும் செயல்படும் என்றார்.