நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ‘பணமதிப்பிழப்பு பயங்கரவாத தாக்குதல்’! ராகுல் ஆவேசம்

டெல்லி:

நாட்டின் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இன்று 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு, ஒரு பயங்கரவாத தாக்குதலைப்போன்றது, இது நாட்டின் பொருளாதாரத்தையே அழித்து விட்டது என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆவேசமாக கூறி உள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு டிவி.,யில் நேரடியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தார். இது நடந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று (நவ.,08) காங்., இளைஞரணியை சேர்ந்த சிலர் டில்லியில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், பண மதிப்பிழப்பு குறித்து, வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதில்,  பணமதிப்பிழப்பு என்ற பெயரில் இந்திய பொருளாதாரத்தின் மீது மோடி தலைமையிலான அரசு  பயங்கரவாத தாக்குதல் நடத்தி 3 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இந்த பணமதிப்பிழப்பு பயங்கரவாத தாக்குதல் பல உயிர்களை பலிவாங்கிய நிலையில், லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளை காணாமல் போக செய்ததுடன், . லட்சக்கணக்கான இந்தியர்களின் வேலையையும் பறித்து உள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் நீதியின் முன் கொண்டு வரப்படவில்லை என கூறி உள்ளார்.

ராகுலின் சகோதரியும், காங்., பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா இது தொடர்பாக டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பணமதிப்பிழப்பு கொண்டு வந்து 3 ஆண்டு ஆகிறது. இந்த செயலுக்கான அனைத்து பாவங்களும் அரசின் தலை மீதே வைக்கப்படும். நமது பொருளாதாரத்தை சீரழித்த பேரழிவு இது என்பது நிரூபணமாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி