பாஜகவின் திட்டமா? பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் சந்திரலேகா சந்திப்பு! ஆர்டிஐ தகவலில் அம்பலம்!

சென்னை:

சுப்பிரமணியசாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், இதை சிலர் மறுத்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் சந்தித்துபேசியது தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது. இதன் காரணமாக பாஜக தனது மறைமுக ஆட்டத்தை தமிழகத்தில் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவை எதிர்த்த காரணத்திற்காக ஆசிட் அடிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, எதிரியான சசிகலாவை சிறையில் சந்தித்து பேசிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி குரல் கொடுத்து வரும் நிலையில், அவரது பெண் நண்பி சசிகலாவை சிறையில் சுமார் ஒன்றேமுக்கால் மணி நேரம் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக ஆர்வலர் நரசிங்கமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், பெங்களூர் சிறையில் யார் யாரெல்லாம் சந்தித்து உள்ளனர் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கர்நாடக சிறைத் துறை அதிகாரிகள் அளித்த பதிலில், கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை சசிகலாவை 36 பார்வையாளர்கள் சந்தித்து  உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.

சசிகலாவை  டி.டி.வி.தினகரன் 7 முறை சந்தித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் 6 முறையும், கமலா என்பவர் 5 முறையும், சிவகுமார் 4 முறையும் சந்தித்துள்ளனர். அத்துடன்,  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி சசிகலாவை நண்பர் என்ற முறையில் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு 1.45 மணி நேரம் நடைபெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சசிகலாவுடன் சந்திரலேகா சந்திப்பு உறுதி செய்யப்பட்டதும்,  இந்த சந்திப்பில் என்ன பேசி இருக்கலாம் என்ற யூகம் பல்வேறு விதங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.  சசிகலாவை முன்கூட்டியே  விடுதலை பற்றி மீண்டும் பேச்சு எழுந்தது. சசிகலாவுக்கு ஆதரவு அளித்து அவரை விரைவில் வெளியே கொண்டுவர பாஜக முயற்சித்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இதன் மூலம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் நன்னடத்தை மூலம் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்து, தமிழக அரசியலில் களமிறக்க பாஜக மறைமுகமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே அரசியல் சகுனி எனப்படும் சுப்பிரமணியசாமியின் நெருங்கிய தோழி சசிகலாவிடம் பேசி, அவரை வசப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக மற்றும் அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் என்றும், ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள பாஜக திட்டம் தீட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே  சமீப காலமாக, டிடிவி தினகரன் மத்தியஅரசுக்கு எதிரான விமர்சனங்களை தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரை நன்னடத்தை விதிகளின் படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மத்திய, மாநில அரசு கையில் இருப்பதால் இந்த விஷயத்தில் பாஜக மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி