மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் மராத்தா கிரந்தி மோர்ச்சா நடத்திய பேரணியை தொடர்ந்து அரசுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 33%க்கு மேல் மராத்தாஸ் என அழைக்கப்படும் மராட்டி மொழி பேசும் மக்களே ஆகும்.  இவர்களுக்கான ஒரு அரசியல் சாராத அமைப்பு மராத்தா கிரந்தி மோர்ச்சா.  இந்த அமைப்புக்கு பா ஜ க, காங்கிரஸ், சிவசேன மற்றும் பல கட்சியினரின் ஆதரவு உள்ளது.   இந்த அமைப்பானது மராத்தாசுக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல முன்னுரிமைகள் தேவை என கோரிக்கை எழுப்பி உள்ளது.  இதற்காக பல ஊர்வலங்களையும், பேரணிகளையும் நடத்தியுள்ளது.

சமீபத்தில் இந்த அமைப்பு தனது 58ஆவது பேரணியை நடத்தியுள்ளது.  இதையொட்டி மகாராஷ்டிரா அரசு இந்த அமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைக்ககூடும் என தெரியவருகிறது.  மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே மராத்தாஸ் இட ஒதுக்கீட்டுக்காக தனது ஒப்புதலை அளித்துள்ளது.  1200 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை தயார் செய்துள்ளது.  அந்த அறிக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் ஒப்புதல் இன்னும் பெறவில்லை.  இதனால் மராத்தா முக்தி மொர்ச்சா வெறும் காகித உத்தரவு தங்களுக்கு ஒரு உதவியும் புரியாது என தெரிவித்துள்ளது.  இதை அரசுக்கு தெரிவிக்க பலமுறை மௌன ஊர்வலங்களும் நடத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த பேரணி பற்றி அவுரங்காபாத் நகரை சேர்ந்த மராத்தா கிரந்தி மோர்ச்சா தலைவர் ஒருவர், ”இதற்கு முந்திய பேரணிகளில் எங்களின் பொதுவான முன்னேற்றத்தை முன் வைத்தோம்.  ஆனால் இப்போது எங்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கவே இந்த பேரணீயை நடத்தினோம்” என்கிறார்.

இவர்கள் நடத்தும் எந்தப் பேரணியிலும் சட்டம், ஒழுங்கு மீறப்பட்டதில்லை எனவும் எந்தக் காரணத்திலும் வன்முறை காரணமாக தங்கள் கோரிக்கைகள் கவனிக்காமல் போகக்கூடாது எனவும் மும்பையை சேர்ந்த வீரேந்திர பவார் தெரிவித்தார்.   சிவசேனா, காங்கிரஸ், மற்றும் என் சி பி ஆகிய கட்சிகள் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, ஆதாயம் பெறப் பார்ப்பதாகவும், இது போன்ற அரசியல் சார்ந்த ஆதரவு எதுவும் தங்களுக்கு தேவை இல்லை எனவும் மோர்ச்சா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.