சென்னை

ண்ணா பல்கலைக்கழகம் முன்னேறும் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னேறும் பல்கலைக் கழக அந்தஸ்து நாட்டில் 20 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்படுகிறது இவ்வாறு தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழகங்களுக்கு தங்கள் பல்கலைக்கழக கட்டணம், பாடத்திட்டக் காலங்கள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவற்றைத் தானே அமைத்துக் கொள்ளும் தன்னார்வ உரிமை பெறுகின்றன. பல நகரங்களில் அமைந்துள்ள ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் நாட்டின் சிறந்த 10 பொறியியல் கல்வி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு முன்னேறும் பல்கலைக்கழக அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் இதற்கான தேர்வுப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இவ்வாறு அந்தஸ்தைப் பெற உள்ள விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

புதிய விதிகளின் படி இவ்வாறு தேர்வு செய்யப்படும் அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு 50% நிதி உதவி அளிக்க வேண்டும் என உள்ளது. இது ரூ.500 கோடி ஆகும். முந்தைய விதிகளின் படி இந்தத் தொகை 5 வருடங்களுக்கு மொத்தம் ரூ.1000 கோடி என இருந்தது. ஆனால் புதிய விதிகளின்படி பல்கலைக்கழக மானியக்குழு ரூ.500 கோடி நிதி உதவி அளிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இந்த அந்தஸ்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து மாநில அரசு அடுத்த வாரம் விவாதிக்க உள்ளது. பல்கலைக் கழக அதிகாரிகள் இது குறித்து அரசு பிரதிநிதிகளிடம் விளக்க உள்ளனர். அதன் பிறகு முன்னேறும் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறத் தேவையான நடவடிக்கைகள் தொடங்குமெனக் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி,”இந்த நிபந்தனையினால் பல மாநில பல்கலைக்கழகங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஐஐடி க்களைவிட அண்ணா பல்கலைக்கழகம் உயர்ந்த தரத்தில் உள்ளது. மத்திய அரசு எந்த நிபந்தனையும் இன்றி இந்த பலகலைக்கழகத்துக்கு உலகின் முதன்மையான கல்வி நிறுவனமாக உதவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.