புதுடெல்லி: முக்கியமான ஒரு போட்டியில், கேப்டனாக தோனி, 7ம் நிலையில் களமிறங்கியது ஒரு தவறான மற்றும் திட்டமிடாத செயல் என்று விமர்சித்துள்ளார் கெளதம் கம்பீர்.

‍நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 217 ரன்களை, சென்னை அணி விரட்டிய நிலையில், பல பேட்ஸ்மென்கள் தடுமாறிய நிலையில், முக்கிய ஹிட்டரான தோனி, 7வது நிலையில் களமிறங்கினார். இதைத்தான் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.

“நேற்று தோனி செய்ததை வேறு எந்த கேப்டனாவது செய்திருந்தால், பெரிய விமர்சனம் எழுந்திருக்கும். ருதுராஜ் கெய்க்வாட், கர்ரன், கேதார் ஜாதவ் போன்றவர்களை தன்னைவிட பெரிய வீரர்கள் என்று தோனி நினைக்கிறாரா?

தோனி, முன்வரிசையில் இறங்கி அணியை வழிநடத்தியிருக்க வேண்டும். அவர், அவுட் ஆகியிருந்தாலும் பரவாயில்லை. அவர் கடைசி நேரத்தில் களமிறங்கியபோது, ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்து போயிருந்தது.

நேற்று சிஸ்கே அணி விரட்டலை மேற்கொள்ளவே இல்லை. அவர்கள், நெட் ரன் ரேட்டுக்கு ஆடியது போலவே இருந்தது. ஒவ்வொரு போட்டியையும் எப்படியாவது வெல்ல முயற்சிக்க வேண்டும்” என்றுள்ளார் கம்பீர்.