இது இயலாமைக் கண்ணீர் அல்ல : குமாரசாமி

பெங்களூரு

னக்கு காங்கிரஸ் தொல்லை தரவில்லை எனவும் தனது கண்ணீர் இயலாமையால் வரவில்லை எனவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார்.   இரு கட்சிகளும்  புரிதலுடன் ஆட்சி புரிந்து வருவதாக இரு தரப்பிலும் கூறப்படுகிறது.   ஒரு கட்சி நிகழ்வில் குமாரசாமி தான் எப்போதும் பதவி விலக தயாராக இருப்பதாக கூறி கண்ணீர் விட்டார்.  இந்நிகழ்வு அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கியது.

பாஜக சார்பில் இந்நிகழ்வை பல தலைவர்கள் விமர்சித்தனர்.  குமாரசாமிக்கு காங்கிரஸ் தொல்லை தருவதாகவும் அவர் இயலாமையால் தவித்து கண்ணீர் விடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.   அத்துடன் கர்நாடக பாஜக அவரை குமாரசாமி என்பதற்கு பதில் கண்ணீர் சாமி என டிவிட்டரில் பதிந்தது.

இந்த விமர்சனங்களுக்கு குமாரசாமி தனது பதிலை அளித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, “எனது கண்ணீர் இயலாமையால் வெளிப்படவில்லை.   எனக்கு காங்கிரஸ் மிகவும் உதவி வருகிறது.   காங்கிரஸால் எனக்கு எந்த ஒரு தொல்லையும் கிடையாது.  நான் எந்த ஒரு அரசு நிகழ்விலும் கண்ணீர் சிந்தவில்லை.   எனது கட்சிதான் எனக்கு குடும்பம் என்ற முறையில் எனது குடும்பத்தினர் முன்பு கண்ணீர் சிந்தினேன்.   நான் அடிப்படையில் ஒரு பாசமுள்ள மனிதன்.

அந்த நிகழ்வில் நான் பேசிய ஒரு மணி நேரத்தில் ஒரு முறை கூட காங்கிரஸ் பற்றி எதுவும் தவறாக கூறவில்லை.   தனது உறவினர்களுடன் உணர்ச்சி பூர்வ்மாக பேசும்  போது எந்த ஒரு மனிதனுக்கும் கண்ணீர் வரும்.   நான் முதல்வர் என்பதையும் மீறி ஒரு உணர்ச்சி பூர்வமான மனிதனாக நடந்துக் கொண்டேன்.

நான் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல நலத் திட்டங்களை அறிவித்துள்ளேன்.   அதற்கு என்னுடைய ஊடக நண்பர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை.   அது எனக்கு மன வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.   அத்துடன் நான் முதல்வரான பின் கடந்த 55 நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்கள் பல தவறான செய்திகளை மக்களிடையே  பரப்பி வருகின்றனர்.   அவைகள் தேவையற்ற செய்திகள் ஆகும்.    அவ்ற்றில் இந்த செய்தியும் ஒன்றாகும்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி