வாரம் 4 நாட்கள் வேலை கொடுத்தால் உற்பத்தி பெருகும்: பொருளாதார நிபுணர்கள் தகவல்

டாவோஸ்:

வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக மாற்றுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று ஆய்வாளர் ரட்ஜர் ப்ரெக்மென்.

சுவிட்சரலாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய பென்சில்வேனியாவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஆதாம் கிராண்ட், “வேலை நாட்களை குறைத்து சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நாட்கள் குறைந்தால், மக்கள் தங்கள் பணியில் முழுக் கவனம் செலுத்துவதோடு, உற்பத்தியின் அளவும் அதிகரிக்கும்.
தரம் மற்றும் கற்பனைத் திறனும் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் நிறுவனத்துக்கு உண்மையாக இருப்பார்கள்” என்றார்.

பொருளாதாரம் மற்றும் வரலாற்று ஆய்வாளர் ரட்ஜர் ப்ரெக்மென் கூறும்போது, ” வேலையை குறைவாகக் கொடுத்து எப்படி தரமாகவும், அதிகமாகவும் பெறுவது என்பதை முதலாளிகள் உணரும் நூற்றாண்டாக இது திகழப்போகிறது.

1970-ம் ஆண்டு வரை, பொருளாதார நிபுணர்கள், தத்துவ ஞானிகள், சமூகவியலாளர்கள் எல்லோரும் குறைவான பணி தரவேண்டும் என்று நம்பினார்கள்.
1920-30 ஆண்டுகளில் முதலாளித்துவம் உச்ச கட்டத்தில் இருந்தபோதே, வேலை நாட்களை குறைத்தால், உற்பத்தி அதிகரிக்கும் என்று உணர்ந்திருந்தார்கள்.

வாரத்தில் 40 மணி நேரம் மட்டும் தொழிலாளர்கள் பணியாற்றினால், உற்பத்தி பெருகும் என ஹென்ரி போர்டு ஆய்வில் கண்டறிந்தார். பணியின் போது அவர்கள் களைப்படையாததே இதற்கு காரணம் என்றும் அவர் விளக்குகிறார் என்றார்,