சென்னை:

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று மாநில அரசுகள் கூறுவது அரசியலமைப்பிற்கு  சட்ட விரோதம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை தி.நகரில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துகொண்ட  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குடியுரிமை சட்டம் தொடர்பாக அவர் பேசினார். அப்போது, அசாமில் நடைபெறும் தேசிய குடிமக்கள் பதிவேடு நீதிமன்ற உத்தரவால் நடைபெற்று வருகிறது, அங்குள்ள நடைமுறை பிற மாநிலங்களுக்கு பொருந்தாது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம், யாருடைய குடியுரிமை அந்தஸ்தையும் பறிக்கும் சட்டம் கிடையாது, இதை எதிர்க்கட்சிகள்  அரசியலாக்கி மக்களை குழப்பி வருகின்றனர், இந்த சட்டத்திதால்,  யாருடைய குடியுரிமை பறிக்கப்படும் என கூறுகிறார்களோ, அவர்களிடம் விளக்கம் தர தயாராக இருக்கிறோம் என்றார்.

மேலும், இலங்கை உள்பட பல வெளி நாடுகளில் இருந்து வந்து அகதி முகாமில் இருப்பவர்களின் நிலை வேதனை மிகுந்தது. இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்,  இந்த சட்டத்தின்படி,  இந்திய குடிமக்களின் யாருடைய குடியுரிமை அந்தஸ்தும் பறிக்கப்படாது என்றார்.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இதுவரை  1,595 பாகிஸ்தானிய அகதிகள்  மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 391 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.  ஒரு பிரிவினருக்கு குடியுரிமை மறுக்கப்படும் என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. CAA என்பது மக்களுக்கு குடியுரிமை வழங்குவதோடு அதை அவர்களிடமிருந்து பறிக்கக்கூடாது என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

ஏற்கனவே, குடியுரிமை சட்டம் 1995ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது, தற்போது,  பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் சில மாநில அரசுகள்,  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்கிறது. அது   செல்லாது; அரசியல் அமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்றார்.

தொடர்ந்து அவரிடம் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கேள்வி கேட்க விரும்பும் கேள்விகளை பார்வையாளர்கள் அதற்கான அட்டைகளில் எழுதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சமர்ப்பித்தனர்.

நிகழ்ச்சி நிறைவில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு, நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது,  ‘நிதி மந்திரியாக இருந்துகொண்டு குடியுரிமை சட்டம் குறித்து ஊர் ஊராக விளக்கம் அளித்து செல்கிறீர்களே… உங்கள் பணி பாதிக்காதா?’ என்று ஒருவரது கேள்வி நிர்மலா சீதாராமனுக்கு படித்து காட்டப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  இன்னும் 10 நாளில் பட்ஜெட் வர இருக்கிறது. அரசின் நிர்வாகத்தை, நல்ல விஷயங்களை மந்திரிகள், அதிகாரிகள் மக்களிடம் கொண்டு செல்வது தவறில்லையே. சமீபத்தில் பிரதமருடனான ஒரு ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை. உடனே எனக்கு பொறுப்பு இல்லை, பொருளாதாரம் சீரழிகிறது… கவலை இல்லையா… என்று விமர்சனம் தருகிறார்கள். என் துறையை நான் நல்லபடியாகவே பார்த்து கொள்கிறேன். ஊர் ஊராக சுற்றினாலும் எனது துறை சார் பணிகளை கோட்டை விட்டது கிடையாது.

வேலையை அப்படியே விட்டுவிட்டு நான் ஊர் சுற்றவில்லை. என் மீதான விமர்சனங்களையும் நான் ரசிக்கிறேன். அதனால் எனக்கு கொஞ்சம் பொழுது போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.