இவாங்கா விசிட் :   பிரம்மாண்ட விருந்தும், பிச்சைக்காரர்களும்!

கேள்வி: ரவுண்ட்ஸ் பாய் பதில்ச ராமண்ணா பதில்

தராபாத் வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா. இதை முன்னிட்டு வரும் செய்திகளில் இரண்டு முக்கியத்துவம் பெருகின்றன.

இவாங்காவுக்கு, உலகிலேயே மிகப்பெரிய விருந்து மண்டபத்தில் தடபுடலாக விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி.

இவாங்கா வருகையை முன்னிட்டு, பிரம்மாண்டமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐதரபாத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எனது சந்தேகம் இதுதான்.

இவாங்கா, சுற்றுப்பயணமாக ஐதராபாத் வரவில்லை. தன்னுடன் வரும் அமெரிக்க தொழிலதிபர் குழுவுக்கு தலைமை தாங்கி வந்திருக்கிறார். தவிர அமெரிக்க அதிபரின் மகள். ஆகவே அவருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதை யாரும் குறை சொல்லப்போவதில்லை.

ஆனால் ஐதரபாத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களை  வெளியேற்றுவதால் இந்திய – அமெரிக்க அரசுகளுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப்போகிறது?

இப்படி செய்வதால், “இந்தியாவில் பிச்சைக்காரர்களே இல்லை” என்று நினைத்துவிட இவாங்காவோ, டிரம்ப்போ, அமெரிக்கர்களோ முட்டாள்கள் அல்ல. இதைவைத்து இந்தியாவை கடுகளவும் அவர்கள் உயர்வாக நினைக்கப்போவதில்லை.

தவிர, “பிச்சைக்காரர்களை  அகற்றினால்தான் இந்தியாவோடு வியாபார ஒப்பந்தங்கள் செய்துகொள்வோம்” என்று சொல்லக்கூடியவர்கள் அல்ல. அவர்களுக்கத் தேவை, தங்களுக்குச் சாதகமான வியாபார ஒப்பந்தம். அதைச் செய்துவிட்டுப்போகப்போகிறார்கள்.

பிறகு எதற்கு இந்த ஆர்ப்பாட்டங்கள்?

ஒருபுறம்.. ஒரு வேளை சோற்றுக்கே அல்லாடுபவர்களுக்கு துன்பம்.. இன்னொரு புறம் உலகிலேயே பெரிய விருந்து…!

இதற்காக தற்போதைய பிரதமர் மோடியையோ, தற்போதைய பா.ஜ.க. அரசையோ மட்டும் குறை சொல்வதற்கு இல்லை. காலங்காலமாகவே நமக்கு இந்த அடிமைப்புத்தி இருக்கிறது.

இந்தியத் தலைவர்கள் வெளிநாடு செல்லும்போது இத்தனை ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடப்பது இல்லை.

ஆனால் இங்கு மட்டும் ஏன்?

மாற வேண்டியது மோடி (பாஜக அரசு) மனநிலை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த நம் மனநிலையும்தான்.