கொல்கத்தா:

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ள மேற்குவங்க மருத்துவர்கள், மம்தா பானர்ஜியின் அழைப்பை நிராகரித்துள்ளனர்.


நில் ரதன் சிர்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வந்து மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை, பேச்சுவார்த்தை நடத்த தலைமைச் செயலகத்துக்கு செல்லமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பயிற்சி மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக நீடித்தது.
இதனால் அரசு மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மருத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பணிக்கு திரும்பாத இளநிலை மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருந்த நிலையில், அதனையும் மீறி போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்களை முதல்வர் பார்க்க வேண்டும், தாக்குதலுக்கு முதல்வர் அலுவலகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில் போராட்டம் கைவிடப்படும் என்று மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

 

மம்தா பானர்ஜி உறுதி

இதற்கிடையே முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் து எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாட்டோம்.

இளநிலை மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். திரும்பியதும் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. யார் மீதும் போலீஸ் நடவடிக்கையை மேற்கொள்ளமாட்டோம் என்றார்.

இந்நிலையில், மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளநிலை மருத்துவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

மருத்துவர்களை பாதுகாக்க தனியாக சட்டம் இயற்றுமாறு மாநில முதல்வர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் திங்கள்கிழமை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.