ஜெ.அன்பழகன் மறைவு: கவர்னர் பன்வாரிலால், முதல்வர் நாராயணசாமி, கி.வீரமணி உள்பட தலைவர்கள் இரங்கல்

சென்னை:

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளரு மான ஜெ.அன்பழகன் இன்று காலை  சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு  மாநில ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் 
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெ.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
கொரோனோ  தொற்றால் அன்பழகன் இறந்த செய்தி அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது.சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் போதும், கூட்டணி கட்சிகளின் மேடையில் பங்கேற்றபோதும் அன்பழகனுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர்.  கட்சித் தொண்டர்களின் அன்பை பெற்றவர். கரோனா காலகட்டத்திலும் தன் உடல் நிலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நலன் கருதி உழைத்தவர்.அவரது இழப்பு திமுக தலைவர் ஸ்டாலின், கட்சித் தொண்டர்கள், அவரது குடும்பத்தினர் ஆகியோருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு மட்டும் இழப்பு அல்ல; ஜனநாயகத்திற்கும், பொதுவாழ்விற்கும் ஈடற்ற இழப்பு. அவரது குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த இயக்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் பதிவில், ‘சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.J.அன்பழகன், கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்திகேட்டு மனவருத்தம் அடைந்தேன்.அவரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்,’ என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

எப்போதும் சிரித்த முகமும் – இரும்பு நெஞ்சமும் கொண்ட ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவித்து உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் முருகன் 

தமிழக பாஜக தலைவர் முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தாருக்கு அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்,’ எனத் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ

சிங்கத்தை, வீர அபிமன்யுவை நாங்கள் இழந்துவிட்டோம். பூவும் கொத்துமாக பூத்துக்குலுங்கிய குடும்பத்தில் ஜெ.அன்பழகனை இழந்தது பேரிழிப்பு என குறிப்பிட்டு உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘ தளபதி திரு.ஸ்டாலின் ஆகியோரின் உற்ற சகோதரராய், உயிர் தோழராய் மிகச் சிறப்பாக பொது வாழ்விலும், சட்டமன்றத்திலும் மக்கள் தொண்டாற்றியவருமான அருமை சகோதரர் திரு. ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது பிறந்த நாளான இன்று இயற்கை எய்திய செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

தமாகா தலைவர் ஜிகே வாசன்

திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் மறைவிற்கு த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சரத்குமார்

திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் மறைவிற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக  சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.  அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கவிஞர் வைரமுத்து

ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம் இழந்தார் தலைவர் ஸ்டாலின். செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம். உறுதிப்பொருள் உரைக்கும் உறுப்பினரை இழந்தது சட்டமன்றம். என் நண்பரை இழந்தேன் நான்.

மரணம் கொடிது,

கொரோனா மரணம்

கொடிதினும் கொடிது

ஆழந்த் இரங்கல், இயக்கத்தார்க்கும்; இல்லத்தார்க்கும்.

 

 

 

 

You may have missed