a
 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு  விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றே அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும்  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன்  கூறியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
23வது நாளான நேற்று கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வாதாடும்போது,  “குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் சில, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுதாகரன் பெயரில் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.  இந்த சொத்துகளை இவர்கள் பெயரில் பதிவு செய்வதற்காக அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் தரப்பட்டது.  குறைந்த மதிப்பீட்டில் பதிவு செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்படும் சுதாகரன் திருமணம் மிக மிக ஆடம்பரமாக பெரும் பொருட் செலவில் நடத்தப்பட்டது.  இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் இசை நிகழ்ச்சியும் பெரும்  செலவில் நடைபெற்றது. அதற்கான ரசீது ரகுமானிடம் இருந்து  வாங்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்தையும், குற்றம்சாட்டப்பட்டவர்கள்  கட்டிடத்துடன் வாங்கி இருக்கிறார்கள். அதற்கான மதிப்பு மிகவும் குறைத்து காண்பிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகைகளை  வருவாய் என  தவறாக காண்பிக்கப்பட்டு உள்ளது” என்று  வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஜெயலலிதா தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு நீங்கள் பதில் வாதம் முன்வைக்கவில்லை. இந்த பட்டியலில் இருந்தே அனைத்தையும் வாசித்து வருகிறீர்கள். இயன்றவரை சுருக்கமாக வாதங்களை முன்வைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாதங்கள் அனைத்தையும் எழுத்து வடிவில் தாக்கல் செய்ய முடியுமா?’’ என்று கேட்டார்கள்.
இதற்கு பதில் அளித்த ஆச்சார்யா, “என்னால் இயன்றவரை சுருக்கமாகவும் அதே நேரத்தில் இந்த வழக்குக்கு மிகவும் முக்கியமான அம்சங்களைத்தான் என்னுடைய வாதத்தில் முன்வைத்து வருகின்றேன். பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள். நிறைய சாட்சியங்கள்  இருப்பதால், நி்ச்சயம் நேரம் ஆகத்தான் செய்யும்”  என்று பதில் அளித்தார்.
உடனே நீதிபதிகள், “ஏற்கனவே உங்களுக்கு  அதிகமான நேரம் அளிக்கப்பட்டுவிட்டது.  இப்போது இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் வாதத்தை முடித்துக் கொள்வீர்களா? துஷ்யந்த் தவேயும் தனக்கு நேரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். இன்று (நேற்று) மதியம் இந்த அமர்வு இருக்காது. விடுமுறைக்கு முன்பு இதுதான் இறுதி நாள். விடுமுறையில் விசாரணையை தொடரலாமா?” என்று  கேட்டார்கள்.
அதற்கு ஆச்சார்யா, “நான் வெளிநாடு செல்வதால் மே 30ம் தேதிக்குப் பிறகு விசாரணையை தொடரலாம். அப்போது எனக்கு ஒரு முழுநாள் தேவைப்படும்” என்றார். .
இதற்கு நீதிபதிகள்,” ஜூன் 1ம் தேதியன்று முழுநாள் விசாரணையை வைத்துக்கொள்ளலாம் .  அன்று ஆச்சார்யாவுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும்.  மீதி நேரத்தில் மற்றவர்கள் தங்கள் வாதங்கள் முன்வைக்கலாம்”  என்று தெரிவித்தனர்.
அப்போது, இந்தோ தோகா உள்ளிட்ட ஆறு நிறுவனங்களை உயர் நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிரான கர்நாடக அரசின்  மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக அரசு தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா  கூறினார்.
அவருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி,, “நான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது” என்றார்.
அதற்கு நீதிபதிகள்,  அவருக்கும் ஜூன் 1ம் தேதியன்று சிறிது நேரம் ஒதுக்கப்படும் என்று  தெரிவித்தனர்.
வரும் 16ம் தேதியில் இருந்து ஜூன் 28ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. . நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய இந்த அமர்வு கோடை விடுமுறையின் இடையில், அதாவது ஜூன் 1ம் தேதியன்று இந்த விசாரணையை மீண்டும் தொடங்கி அன்றே அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும் என்று  கூறியிருக்கிறது. .