ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: ஜெ.தீபா பேட்டி

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்பட ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா கூறியதாவது: ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நாங்களே வாரிசு என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகி உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது. அவசர சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால் மேல்முறையீடு செய்வோம். வேதா இல்லம் மட்டுமல்லாது, ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசுதாரர்கள் என்றார்.