ஜெ. தீபாவின்   கணவர் மாதவன் தலைமறைவு

--
தீபாவுடன் மாதவன்

சென்னை :

ஜெ. தீபாவின் கணவர் மாதவன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் வீடு சென்னை தி.நகரில் உள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று அன்று இங்கு வந்த நபர் ஒருவர், தான் வருமானவரித்துறை அதிகாரி என்றும் சோதனையிட வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தகவல் பரவி ஊடகத்தினர் குவிந்தனர். மேலும் காவல்துறையினரும் வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே அந்த நபர் தப்பியோடினார். அவர் போலி நபர் என்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் வலைவீசித் தேடினர்.

இந்த நிலையில் அவர் மாம்பலம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், “ என் பெயர் பிரபாகரன். ஜெ.தீபாவின் கணவர்தான் என்னை வருமானவரித்துறை அதிகாரிபோல் நடிக்கச் சொன்னார்.  எனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக்க் கூறிய மாதவன், எனது நடிப்பைப் பார்க்க, வருமானவரித்துறை அதிகாரியாக நடிக்கச் சொன்னார்.

நானும் நடிப்பு என்று நினைத்தே அவரது வீட்டுக்குச் சென்றேன். அங்கு செய்தியாளர்களும், காவல்துறையினரும் வந்தபிறகு எனக்கு பயமாகிவிட்டது. ஆகவே பயந்தேன். அங்கிருந்து நான் தப்பியோட, மாதவன் உதவினார்” என்று அந்த நபர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாதவன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர், “எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழம்” என்ற கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.