பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு : சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!

--

மும்பை: பத்திரிக்கையாளர் ஜோதிர்மே டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மும்பையில் இயங்கி வரும் ஆங்கில புலனாய்வு பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிந்து வந்த ஜோதிர்மே டே என்ற பத்திரிக்கையாளர், கடந்த 2011 ஆண்டு ஜூன் 11ம் தேதி கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரித்தது. சக பத்திரிக்கையாளர்கள் ஜிக்னா வோரா மற்றும் ஜோசப் பால்சன் உட்பட மொத்தம் 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். பிறகு  இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்தில்  நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கும் தொடர்பு இருக்குமா என்று விசாரிக்கப்பட்டது. கடைசியில் சோட்டா ராஜன் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவரது தலைமையிலான கும்பல்தான்  ஜே டே எனப்படும் ஜோதிர்மே டே-வை கொலை செய்தது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு விசாரணை நடந்து வந்தது. தற்போது இந்த வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பத்திரிக்கையாளர்கள் ஜிக்னா வோரா மற்றும் ஜோசப் பால்சன் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பின் தண்டனை விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.