ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் ரத்து

டில்லி

வகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கைரேகை வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அந்நாடு முழுவதும் பரவியது.   தற்போது பல உலக நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   இதனால் உலக சுகாதார நிறுவனம் சுகாதார அவசர நிலையை அறிவித்து மக்களுக்குப் பல எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.

அதன்படி கூட்டங்களில் கலந்துக் கொள்ளக் கூடாது,  ஒருவரை ஒருவர் தொடக்கூடாது, எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   இந்தியாவில் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.   அதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டில்லியில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோ மெட்ரிக் அட்டெண்டன்ஸ் எனப்படும் கைரேகை மூலம் வருகை  பதிவு செய்யும் முறை அமலில் உள்ளது.  நேற்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த கைரேகை வருகை பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.