சேலத்தில் ஜெ. பிரச்சாரம் : வெயில் கடுமையாக இருக்கும் 

2

சென்னை:  சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 16 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சேலத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்வார் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.  இன்று சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  இன்று சேலத்தில் பிரச்சாரம் செய்கிறார்.  சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஏற்காடு (தனி), ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய 11 தொகுதி வேட்பாளர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய 5 தொகுதி வேட்பாளர்கள் என 16 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.

சேலத்தை அடுத்த மகுடஞ்சாவடி காளிகவுண்டன்பாளையம் கிராமத்துக்கு உள்பட்ட கூத்தாடிபாளையம் பகுதியில் 24 ஏக்கர் பரப்பளவு உள்ள பகுதியில் தேர்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேடை அருகே ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து தரையிறங்க இறங்கு தள வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரசாரக் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்தும் சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே சேலம் பகுதியில் இன்று வறண்ட வானிலை காணப்படும் என்றும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.