‘ஜாக்லின்:’ ஜெயலலிதா மர்ம மரணம் பற்றிய குறும்படம் திரையிட தடை

மதுரை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய ‘ஜாக்லின்’ என்ற குறும்படத்தில் சர்ச்சைக் குரிய காட்சிகள் உள்ளதாக என கூறி காவல் துறை அப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ‘ஜாக்லின்’ என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த படம்  நேற்று மாலை மதுரையில்,  தபால் தந்தி நகர் அருகே வெளியிடப்போவதாக தயாரிப்பு குழுவினர் அறிவித்திருந்தனர்.

மதுரைச் சேர்ந்த கிரீன் ஸ்கை என்ற நிறுவனம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய ‘ஜாக்லின்’ என்ற ஒரு குறும்படத்தை கடந்த சில மாதங்களாக தயாரித்து வந்தது.

நவம்பர் 23ஆம் தேதி ஜாக்லின் குறும்படம் வெளியிடப்படுவதாக அந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து மதுரை நத்தம் சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் நவம்பர் 23ம் தேதி மாலை 6 மணிக்கு படம் வெளியாக இருந்த சில நிமிடங்களுக்கு முன் தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருந்து வந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஜாக்லின் படம் தயாரிப்பு குழு

இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் குறும்படத்தை கைப்பற்றி படத்தை வெளியிட தடை செய்தனர்.

படத்தை முழுமையாக பார்த்த காவல்துறையினர்,  அதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் நீக்கவேண்டும் என படத்தயாரிப்பு குழுவினருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், காட்சிகளை நீக்க  படக்குழுவினர் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து படத்தினை திரையிட தடை விதித்தனர்.