கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய பாலிவுட் நடிகை ஜாக்குவலின் ஃபெர்னாண்டஸ் மகாராஷ்ட்ரிய மாநிலத்தைச் சேர்ந்த பதார்தி, சகூர் ஆகிய இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் ஜாக்குவலின் அளித்துள்ள பேட்டியில், “இது கடந்த சில காலமாகவே என் மனதில் இருந்த விஷயம்.

சமூகத்தில் ஒரு பகுதியினர் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகக் கிட்டத்தட்ட 1,550 பேருக்கு நல உதவிகள் வழங்கப்படும். கிராமத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகள், கிராம பராமரிப்பாளர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுவார்கள். விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படும். 150 பெண்களுக்கு ஆதரவும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் களப் பணியாளர்கள் 7 பேருக்கு பயிற்சி தரப்படும்.

ஊட்டச்சத்துக் குறைபாடிலிருந்து மீண்டு வர 20 குடும்பங்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும். கருவுற்றதிலிருந்து குழந்தை பிறப்பு வரை 20 பெண்கள் பராமரிப்பு தரப்படும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள 20 குழந்தைகளுக்குச் சிகிச்சை தரப்படும். 20 சமையலறைத் தோட்டங்கள் கிராமங்களில் அமைக்கப்படும். சமூகத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது என் பெற்றோர் எனக்குக் கற்றுத் தந்தது. அவர்கள் எனது இந்த முடிவுக்கு முழு ஆதரவு தந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.