ஜாக்டோ ஜியோ போராட்டம்: 4000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு

சென்னை, 

சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஊதிய முரண்பாடு களைய வேண்டும், புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நேற்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று போராட வந்தவர்களை அதிரடியாக கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து. தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வரும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் அந்தந்த மாவட்ட பகுதிகளின் எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சோதனைகள் மேற்கொண்டு தடுத்து நிறுத்தினர்.

மேலும் தடையைமீறி சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்திருந்தனர்.  நேற்று பகல் 12 மணி வரை போராட்டம் நீடித்தது. இதன் காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலையில் உள்ள மதரசா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடம் மற்றும் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். 1,700 பெண்கள் உள்பட 7,600 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட ஜாக்டோ, ஜியோ அமைப்பை சேர்ந்த  4 ஆயிரம்பேர் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.