சேலம்:

விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு  விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

9 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு பணிகள் முடங்கி உள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் படிப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரோகிணி,  அரசு செயலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைபடி, போராட்ட நாட்களில் பணிக்கு வராத  அனைவரது சம்பளமும் பிடித்தம் செய்யப்படும் என்றார்.

மேலும், விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.