அனைத்துவகை கிரிக்கெட்டிலும் 50 சர்வதேச போட்டிகள் – ஜடேஜா சாதனை!

மெல்போர்ன்: அனைத்துவகை கிரிக்கெட்டிலும் குறைந்தபட்சம் 50 சர்வதேச போட்டிகளை ஆடிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் இந்த சாதனையை, எம்எஸ் தோனி, விராத் கோலி ஆகியோருடன் சேர்ந்து எட்டியுள்ளார் ஜடேஜா. இவர், பெளலிங் மற்றும் பேட்டிங் மட்டுமல்ல, ஃபீல்டிங்கிலும் வல்லவர்.

இவர் மொத்தம் 50 டெஸ்ட் போட்டிகள், 168 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி-20 போட்டிகளில், சர்வதேச அளவில் இதுவரை பங்கேற்றுள்ளார்.

“இந்த மிகப்பெரிய கெளரவம் எனக்கு கிடைப்பதற்கு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம், இதர ஊழியர்களுக்கு நன்றி. தோனி மற்றும் கோலியின் வரிசையில், இந்த சாதனையில் இணைந்துள்ளது எனக்குப் பெருமை. எனக்கு கிடைத்துவரும் ஆதரவிற்கு நன்றி” என்றுள்ளார் ஜடேஜா.