புவிசார் குறியீடு கோரும் நாமக்கட்டிகள் செய்யும் ஜாதேரி கிராமம்

திருவண்ணாமலை

நாமக்கட்டிகள் செய்து வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜாதேரி என்னும் சிற்றூர் புவிசார் குறியீடு கோரி உள்ளனர்.

பெருமாள் கோவில்கள் மற்றும் பெருமாளை வணங்கும் வைணவர்கள் நாமம் இடுவதை நன்கு அறிந்தவர்கள் ஆவார்கள். பெருமாளின் நெற்றியில் மட்டுமின்றி கோவில் சுவர்களிலும் நாமம் காணப்படுவது வழக்கமாகும். இந்த புனித சின்னத்தின் இருபக்கமும் வெள்ளையாகவும் நடுவில் சிவப்பாகவும் இருக்கும். இந்த  வெள்ளையை அமைக்கப் பயன்படுவது நாமக்கட்டி என்பதை அனைவரும் அறிவார்கள். அதைச் செய்யும் இடம் குறித்து பலருக்கு தெரியாது.

தமிழகத்தின் வடக்கு பகுதியில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜாதேரி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பலரும்  நாமக்கட்டிகள் செய்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். நாமக்கட்டிகள் தயாரிக்க ஒரு தனித்துவம் வாய்ந்த சுண்ணாம்புக் கற்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அவற்றை மாடுகளால் இயங்கும் இயந்திரம் மூலம் பொடி செய்யப்பட்டு அந்த பொடி அதன் பிறகு சலித்து எடுக்கப்படுகிறது.

இவ்வாறு சலிக்கப்பட்ட பொடி 20 நாட்களுக்கு ஒரு தொட்டியில் வைக்கப்பட்டு அது வெள்ளை நிறம் அடைகிறது. அதன் பிறகு அந்த பொடி ஒரு பசை  போல் ஆக்கப்பட்டு விரல் நீளமுள்ள கட்டிகளாக உருவாக்கப்படுகிறது. இதுவே நாமக்கட்டி ஆகும். இந்த நாமக்கட்டி அதன் பிறகு சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அனைத்து பெருமாள் கோவில்கள் மற்றும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இது குறித்து திருவண்ணாமலை வட்டாட்சியர் பாலமுருகன், “இந்த நாமக்கட்டிகள் செய்வது இந்த ஒரு ஊரில் மட்டுமே ஆகும். இவர்களுக்கு எந்த ஒரு கூட்டுறவு அமைப்பும் கிடையாது. இவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க நான் இந்த ஊருக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் செய்துள்ளேன். தற்போது முகவர்கள் மூலம் கிராம வாசிகள் நாமக்கட்டிகளை விற்று வருகின்றனர். இந்த குறியீட்டினால் அவர்களால் நேரடி விற்பனை செய்து பொருள் ஈட்ட முடியும்” என தெரிவித்துள்ளார்.