ரிலையன்ஸ் குழுத் தலைவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி

விஜயவாடா

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் பரிமள நாத்வானி அறிவிக்கபடுள்ளார்.

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடைகிறது.  இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.   ஆந்திர மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 இடங்களில்  ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 151 இடங்கள் உள்ளதால் இந்த நால்வரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி இந்த உறுப்பினர்களுடைய பெயர்களை அறிவித்துள்ளார்.  இதில் பில்லி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மோபிதேவி வெங்கட ரமணா ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்தில் அமைச்சர்களாக உள்ளனர்.   மற்றும் ஆந்திர மாநில தொழிலதிபரான அல்லா அயோத்ய ராமி ரெட்டியின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் குழுமத் தலைவர் பரிமள் நாத்வானி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.  இவர் ஏற்கனவே இருமுறை சுயேச்சையாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.  இவருடைய பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் உறுப்பினர் ஆக உள்ளார்.

இந்த அறிவிப்புக்கு சில தினங்கள் முன்பு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி சந்தித்துள்ளார்.  பரிமள் நாத்வானி தனது டிவிட்டரில் தன்னை தேர்வு செய்ததற்காக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவர் கட்சிக்கு நன்ரிஒயை தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் ஆந்திர மக்களின் நலனுக்காகப் பாடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.