ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரில் நடைபெற்ற என்கவுன்ட்டர் நிகழ்வை வரவேற்றுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினரையும் கண்டறிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்த சம்பவம் நாடு முழுவதும் ஆதரவைவிட, எதிர்ப்பையே சம்பாதித்து வருகிறது.

எளிய பின்னணி உடைய குற்றவாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்துகொள்ளும் விதமும், உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் பலாத்காரம் மற்றும் தொடர் படுகொலைகள் விஷயத்தில் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் போன்ற நபர்கள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்துகொள்ளும் விதமும் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளன.

இந்நிலையில், ஆந்திர சட்டசபையில் இப்பிரச்சினை எதிரொலித்தது. அப்போது பேசிய முதல்வர் ஜெகன்மோகன், “பெண்களின் பாதுகாப்பிற்காக ஆந்திராவில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். அது அவசியமும்கூட.

ஐதராபாத் பலாத்கார சம்பவம், 2 பெண் குழந்தைகளின் தந்தையான என்னை கடுமையாக பாதித்துவிட்டது. என்கவுன்ட்டர் செய்த தெலுங்கானா காவல்துறைக்கும் அம்மாநில முதல்வருக்கும் எனது பாராட்டுக்கள். அதேசமயம், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினரையும் முதல்வர் கண்டறிய வேண்டும்” என்றார்.