திருப்பதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினருமான வி.சுப்பா ரெட்டி, திருமலா திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்புதான், திருமலையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா ஆலயத்தை நிர்வாகம் செய்கிறது.

ஆந்திராவில் பொதுவாக ஆட்சி மாறும்போது, இந்த வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாறுவது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்தான் என்றாலும், முதல்வரின் நெருங்கிய உறவினரே நியமிக்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளளது.

சுப்பா ரெட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அறக்கட்டளை வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான புட்ட சுதாகர் யாதவ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதேசமயம், தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், தலைவராக தொடர்வேன் என்றும் புட்டா சுதாகர் பிடிவாதமாக இருந்தார். ஆந்திராவில் ஆட்சி மாறியதையடுத்து, அறக்கட்டளை வாரியத்தின் 10 உறுப்பினர்கள் தாமாகவே முன்வந்து, தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த ராஜினாமா சம்பவங்களையடுத்து, தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில், இதர அறக்கட்டளை உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது