தொடரும் உடற்பயிற்சி சவால்: இபிஎஸ், ஸ்டாலின், ரஜினிக்கு ஜக்கி வாசுதேவ் அறைகூவல் (வீடியோ)

சென்னை:

ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈஷா யோகா மைய தலைவர்  சத்குரு ஜக்கி வாசுதேவ்,  தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியலுக்கு வரப்போவதாக சொல்லிக்கொண்டி ருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

ஈஷா யோகா மைய நிர்வாகி ஜக்கி வாசுதேவ்

ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை  வெளியிட்டு,   நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும், அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு டேக் செய்திருந்தார்.  இதற்கு பதில் அளித்த கிரிக்கெட் வீரர்  விராட்கோலி, தான் செய்யும்  உடற்பயிற்சி வீடியோவை  வெளியிட்டு, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார்.

கோலியின் சவாலை ஏற்ற மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டதுடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டி வீரர் மணிகா பத்ரா மற்றும்  40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும்  சவால் விடுத்திருந்தார்.

இந்த பரபரப்பான பிட்னஸ் சவால் தற்போது தமிழகத்திற்குள் புகுந்துள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள ஈஷா யோகா மைய நிர்வாக சத்குரு ஜக்கி வாசுதேவ், தான் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு தமிழக அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்து  உள்ளார்.

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட  அந்த வீடியோவில், தமிழக முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ், ஸ்டாலின், ரஜினி போன்றோரும் பிட்னஸ் சவாலில் பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும்,   உடல் ஆரோக்கியம் என்பது உடல் பலமாக இருக்க வேண்டும். அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். இதயம் மிருதுவாக இருக்க வேண்டும்.

நான் முன்பு தினசரி விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் நேரம் கிடைக்காமல் விளையாட முடியவில்லை. கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் அடி வரை உயரத்தில் உள்ள மலைகளுக்கு வருடத்தில் 2 முறை செல்வது உண்டு. அதுதான் எனக்கு உடல் பரிசோதனை.

நான் மருத்துவ பரிசோதனை செய்வதில்லை. சர்வதேச யோகா தினமான இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்கமருதனா யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். இந்திய இளைஞர்கள் அனைவரும் அங்கமருதனா யோகா பயிற்சி பெற்று தங்கள் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

ஜக்கியின் இந்த சவால் ஏற்கப்படுமா…..? என்பது கேள்விக்குறியே…..! ஆனால் ஜக்கியின் சவால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

https://youtu.be/Lq5-B1zMXfw