ஜெய்ப்பூர்:

நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது மழை காரணமாக இடையே போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாட்டு தொடங்கியது.

இந்த போட்டியில் டில்லி டேர் டெவில்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 11வது சீசனின் 5வதுபோட்டி சென்னையில் முடிவடைந்த நிலையில், 6வது போட்டி ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற டில்லி டேர் டெவில்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் காரணமாக ராஜஸ்தான் அணியினர் மட்டையை பிடித்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரகானேவும், டி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். அவர்கள் எதிர்பார்த்த அளவில் விளையாடாமல், மைதானத்துக்கு சென்ற வேகத்திலேயே வெளியேற தொடங்கினர். ஷார்ட் 6 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்சும்  16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மட்டையை பிடித்த  சஞ்சு சாம்சன் 22 பந்தில் 37 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர் இறங்கினார். அதுவரை நிதானமாக ஆடி வந்த  ரகானே 45 ரன்களில் அவுட்டானார்.  பட்லர் 18 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 17வது ஓவர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக காலதாமதமானால், டில்லி டேர் டெவில்ஸ் அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

டில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேக்ஸ்வெல் மற்றும் காலின் முன்ரோ களமிறங்கினர்.ஆனால் வந்த வேகத்திலேயே முன்ரோ ரன் அவுட்டாக களத்தில் இருந்து பரிதாபமாக வெளியேறினார்.   தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார்.

இருவரும் இணைந்து விளையாட தொடங்கினர். இதன் காரணமாக ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.  அணியின் ஸ்கோர்  34 ஆக இருந்தபோது மேக்ஸ்வெல் 17 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கிறிஸ் மாரிஸ் களமிறங்கினார்.

கடைசி இரண்டு ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 5வது ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்த் 20 ரன்னில் அவுட்டானார். இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்து தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார். ஆனால்  அவரால் சோபிக்க முடியவில்லை. அவுட்டாகி வெளியேறினார். அதுவரை  4 விக்கெட்டுக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக டில்லி பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.