கொல்கத்தா

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துக்கும் வங்க கலாசாரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறி உள்ளார்.

உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான அமர்த்தியா சென் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். உலகின் மிக உன்னத விருதான நோபல் பரிசு இவ்ருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 85 வயதாகும் சென் பல உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பணி புரிந்தவர் ஆவார்.

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா இவருக்கு கடந்த 1999 ஆம் வருடம் அளிக்கப்பட்டுள்ள்து. இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அமர்த்தியா சென் தனது உரையில், “வங்க மக்களை பொறுத்த வரை ’மா துர்கா’ என்னும் கோஷம் மட்டுமே இருந்து வந்தது.

இந்த மா துர்கா என்னும் கோஷம் வங்க மக்களின் வாழ்வோடு கலந்துள்ளது. நான் எனது நான்கு வயது பேத்தியிடம் உனக்கு பிடித்த கடவுள் எது என கேட்டதற்கு அவர் மா துர்கா என பதிலளித்தார். அந்த அளவுக்கு வங்க மக்கள் மா துர்காவுடன் ஒன்றி போய் உள்ளனர். ஆனால் சமீப காலமாக ஜெய்ஸ்ரீராம் என்னும் கோஷம் பிரபலமாகி வருகிறது.

இது வங்க கலாசாரத்துக்கு தொடர்பில்லாத கோஷம் ஆகும். ஸ்ரீராம நவமி இம்மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக மட்டுமே கொண்டாடப்படுகிறது. இதை பயன்படுத்தி ஆதாயம் தேட நினைக்கும் சிலர் ஜெய்ஸ்ரீராம் என்னும் கோஷத்தை முன் வைக்கின்ரனர். அதை சொல்ல மறுப்பவர்களை அடிப்பது மிகவும் கொடூரமானது” என தெரிவித்தார்.