டெல்லி:

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது முறைகேடு நடந்ததாக டெல்லி முதல்-வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேர் குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு அவர்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் அருண் ஜெட்லி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அருண் ஜெட்லியிடம் குறுக்கு விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. கெஜ்ரிவால் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். இதற்காக உயர்நீதிமன்ற இணை பதிவாளர் முன்பு அருண் ஜெட்லி ஆஜரானார். அவரிடம் கெஜ்ரிவால் தரப்பு 92 வயதாகும் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, ‘இந்த ஊழல் பற்றி நான் எழுதிய கட்டுரையை, அருண் ஜெட்லியின் மிரட்டலால் ஒரு வாரப்பத்திரிகை வெளியிடவில்லை. அருண் ஜெட்லி தனது குற்றத்தை மறைத்து மக்களை ஏமாற்றுகிறார்’ என்று ராம் ஜெத்மலானி கூறினார்.

அதற்கு அருண்ஜெட்லியும், அவருடைய வக்கீல்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘இந்த வார்த்தையை கெஜ்ரிவால் சொல்ல சொன்னாரா?’‘ என்று அருண்ஜெட்லி கேட்டார். ‘ஆமாம், அவர்தான் சொல்ல சொன்னார்’ என்று ராம் ஜெத்மலானி பதில் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

இந்நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறி கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தன்னை அவதூறாகப் பேசியதற்காக ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடும்படி ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.